Home

முத்தொள்ளாயிரம் (சோழர்)
எஸ். கருணானந்தராஜா

முத்தொள்ளாயிரம் சோழர் பகுதியில் ஆரம்பம் முடிவு என்ற நியம வரைமுறைகளில்லாத தனிப்பாடல்களாக முப்பது வெண்பாக்களே கிடைத்துள்ளன. பாட்டுடைத் தலைவனான சோழனின் பெருமையை கவிக் கூற்றாகவும், அவனை நினைந்து உருகும் ஓர் தலைவியின் கூற்றாகவும், சில செய்யுள்கள் தலைவியின் தாய் அல்லது தோழி உரைப்பது போலவும் காணப்படுவதால் இதை ஓர் செய்யுள்களின் தொகுப்பாகவே கருதவேண்டியுள்ளது. முத்தொள்ளாயிரம் சேர சோழ பாண்டியர்களாகிய மூவேந்தரினதும் கீர்த்தியைக் கூறுவதால் பிற்காலத்தில் அதாவது அப்பேரரசுகள் தனித்தனியே கோலோச்சிய காலத்தின் பின்னர் அவர்களின் புகழறிந்து எழுதப்பட்ட செய்யுள்களென்றே அவற்றைக் கருதவேண்டியுள்ளது. அவ்வகையில் சங்க மரபைப் பின்பற்றிப் பிற்கால ஆசிரியர் அல்லது ஆசிரியர்கள் இவ்வெண்பாக்களை ஒரு கலைவையாக உருவாக்கியிருக்கக் கூடும்

முத்தொள்ளாயிரத்தில்; சோழர்களைக் குறிக்கும் சொற்கள்:

1. கிள்ளி 11. வளவன்
2. உறந்தையர் கோன் 12. செம்பியன்
3. கோழிக் கோமான் 13. நீர் நாட்டுக் காளை
4. சோழன் 14. புகார்ப் பெருமான்
5. உறையூர் வளவன் 15. புனல் நாடன்
6. சென்னி 16. காவிரி நீர் நாடன்
7. நலங்கிள்ளி 17. தண்தார்க் கிள்ளி
8. கோக்கிள்ளி 18. வேல் வளவன்
9. போர்க்கிள்ளி 19. புனல் நீர் நாடன்
10. கோழியர் கோக் கிள்ளி 20. இலங்கிலை வேற்கிள்ளி என்பனவாம்.

இவ்வனைத்துப் பெயர்களும் தனியொரு மன்னனைக் குறித்ததாகக் கூறமுடியாது. சோழ ஏகாதிபத்தியத்தின் பல்வேறு காலகட்டங்களில் வாழ்ந்த மன்னர்கள் இவ்வாறான சிறப்புப் பெயர்களால் குறிக்கப்பட்டார்கள். மேலும் உறையூர் எனப்படும் உறந்தை, பூம்புகார் எனப்படும் காவிரிப்பூம் பட்டினம் போன்ற தலைநகரங்களைச் சோழர்கள் கொண்டிருந்த காலமும் வேறுபட்ட காலங்களானதால் ஒரு குறித்த சோழ மன்னனைச் சுட்டாது பொதுவாக சோழ மன்னர்கள் புகழ் கூறுவதற்காய் சங்ககால மரபில் தலைவனான அரசன்பால் தலைவியானவள் கொள்ளும் காதலுட்பட பல்வேறு வகையில் மெய்க் கீர்த்தி கூறும் வெண்பாக்களாக இந்தநூல் இயற்றப்பட்டுள்ளதைக் காணமுடிகின்றது. தஞ்சை, பழையாறை கங்கைகொண்ட சோழபுரம் போன்ற நகரங்களைப்பற்றி இந்நூல் குறிப்பிடவில்லை.முத்தொள்ளாயிரத்தின் சோழர் பகுதியில் முதற் செய்யுள் கவிக் கூற்றாய் சோழனின் யானையைப் புகழ்ந்துரைக்கின்றது. இரண்டாஞ் செய்யுள் உலா வரும் அத் தமிழ் மன்னனைக் காணக் கதவைத் திறக்குமாறு வேண்டுகின்றது. மூன்றாஞ் செய்யுள் மன்னன் பால் காதலுற்றவோர் தலைவி அவன் தனக்கோர் கானல் நீர் என்னுமாறு கவலும் அவள் நிலையைக் குறிக்கின்றது. நான்காஞ் செய்யுளோ மன்னன் வீதியுலா வரும்போது சன்னல்களினூடாக அவனைப் பார்த்து அவன் தங்களுக்குக் கிடைக்க மாட்டானா என ஏங்கும் பெண்களின் நிலையைக் கவிக் கூற்றாய் மீண்டும் கூறுகின்றது ஐந்தாம் செய்யுள் மீண்டும் தலைவி கூற்றாகவும் ஆறாஞ் செய்யுள் தாய் அல்லது தோழியின் கூற்றாகவுமுள்ளது. ஏழாஞ் செய்யுளிலிருந்து இருபதாஞ் செய்யுள்வரை மீண்டும் தலைவியின் கூற்றாகச் சோழன் பால் அவள் கொண்ட காதலை வெளிப்படுத்துகின்றன. அதன்பின்னர் வரும் செய்யுள்கள் அனைத்தும் கவிக் கூற்றாய்ச் சோழன் புகழைக் கூறுகின்றன.

திருக்குறள் காமத்துப் பாலுட்படச்; சங்க இலக்கியத்தில் அகவொழுக்கம் கூறும் ஏனைய நூல்களிலும் இத்தகைய கலப்பான தன்மையிலேயே அதாவது தலைவி, தோழி, தலைவன், கவி ஆகியோரின் கூற்றாகவே காதலொழுக்கம் கூறப்படுகின்றது. ஆனால் முத்தொள்ளாயிரமோ புறவொழுக்கம் அதாவது சேர சோழ பாண்டிய மன்னர்களின் வீரத்தைக் கூறும் நூலாகவும் அதே வேளை அவ்வீரத்தினையும் புகழினையும் காதலை முன்னிறுத்திக் கூறும் நூலாகவுமிருப்பதால் ஏனைய நூல்களிலிருந்து சற்று மாறுபட்ட அதாவது அகமும் புறமும் கலந்த தோற்றத்தைக் காட்டுகின்றது.

முத்தொள்ளாயிரம் வீரத்தையும் காதலையும் ஒரு சேரச் சிலாகிக்கும் நூலாதலால் கலிங்கத்துப் பரணியுட்பட புறத்திணை கூறும் சங்க நூல்களில் காணப்படும் வன்முறை போற்றும் தன்மையை நிரம்பக் கொண்டது. பரணி போர்க்களத்துப் பேய்களைப் பற்றிப் பாடுவதுபோல முத்தொள்ளாயிரம் சோழர் பகுதியிலும் சில பாடல்கள் உள்ளன (28,29). சோழனின் பெருமையை நேரடியாகக் கூறாது அவனது களிறு உறந்தை, கொற்றக் குடை போன்றவற்றைச் சில செய்யுள்கள் வர்ணிக்கின்றன (22,23,25,26). வன்முறை போற்றலின் உச்சகட்டமாயுள்ளது இறுதிச் செய்யுளாகும்.

சோழ மன்னனான செம்பியன் பெயர் போற்றாத பகைவர்கள் புறமுதுகிட்டு ஓடியதால் அவர்களும் அவர்களது நாட்டுப் பெண்களும் காடுகளில் உறைநதனர். அதனால் அங்குள்ள புதர்களினிடையே அப்பெண்கள் ஈன்ற குழந்தைகள் இலைதளைகளைப் படுக்கையாகக் கொண்டு தூங்கின. அக்குழந்தைகளுக்குத் தாலாட்டாகக் காட்டில் வதியும் கூகைகளினதும் கோட்டான்களினதும் கூக்குரல்கள் அமைந்தன என்று இறுதிச் செய்யுள் சோழனின் வீரத்தைச் சிலாகிக்கின்றது. இன்றைய வன்னிக்களத்தில் நடப்பதும் எமக்கு இதையே நினைவூட்டுகின்றது.

தமிழன் தன் புறவாழ்வில் நடந்த இத்தகைய கொடூர நிகழ்ச்சிகளைத் தனது பகழுக்குப் பெருமை சேர்ப்பனவாக எண்ணி இலக்கியங்களில் பதித்திருக்கின்றான். அத்தகைய இலக்கியப் போக்கு இன்றும் காணப்படுகின்றது. ஒரு புறம் சங்க இலக்கியங்கள் இவ்வகையில் தமிழர் வீரம்போற்ற, மறுபுறம் சமய இலக்கியங்கள்; மதவெறியைத் தூண்டிய நிலை பல இடங்களில் உள்ளது.

வெளி நாடுகள்மீது படையெடுத்ததால் தமிழர்கள் தாங்களாகவே தேடிக்கொண்ட பகைவர்கள் ஒரு புறமும், சொந்த நாட்டில் தமிழ் இனத்திற்குள்ளேயே மூவேந்தர்களுக்கிடையிலும் குறுநில மன்னர்களுக்கிடையிலும் இருந்த பகை மறுபுறமுமாகப் போர்வாழ்வு வாழ வேண்டியேற்பட்டதால் பண்டைய தமிழர்தம் சங்க இலக்கியப் பாரம்பரியம் காதலுக்கு அடுத்ததாக வன்முறைசார்ந்த போரும் அதன்பாற் பெற்ற புகழையுரைப்பதுமாகவேயுள்ளது.

இத்தகைய வன்முறை சார்ந்த இலக்கியப் பாரம்பரியத்தைத் தமிழன் ஏன் தெரிவு செய்தானென்னும் கேள்வி எழுகின்றது. சுற்றவர நின்ற பகைவர்களால் தாம்பெற்ற துயரங்களும் வேதனையும் அதற்கெதிராக எழுந்த பகைவர்களைப் பழிவாங்க வேண்டுமென்னும் உணர்வுமே இப்பாரம்பரியத்தை உருவாக்கியிருக்க வேண்டும். முத்தொள்ளாயிரம் இப்பரம்பரியத்தைப் பின்பற்றித் தம்முள்ப் போரிட்டு மடிந்த மூவேந்தர்களையும் ஒரு சேர, காய்தலுவத்தலின்றிப் போற்றி நிற்கின்றது எல்லாமே வெண்பா வகைப் பாக்களால் இயற்றப்பட்டுள்ளமையால் இதனையோர் தொகுப்பு நூலாகக் கொள்வதும் சரியோ என ஐயுறவேண்டியுள்ளது. தனியொரு மன்னனின் புகழ்பாடாது தம்முள் மோதிய மூவரினதும் புகழ்பாடலால் சங்க மரபைப் பின்பற்றி யாரோ மிகப்பிறபட்ட காலத்தில் இந்நூலை இயற்றியிருக்க்கக் கூடுமோவென்றும் ஐயற வேண்டியுள்ளது.டாது

நீதிநூலாகத் திருக்குறளை இயற்றிய வள்ளுவனார் சங்கத்தின் அகத்திணைமரபு இல்லாவிடில் அது புலவர்களால் அங்கீகரிக்ப்படாது போயவிடுமோவென்னும் அச்சத்தில் காமத்துப்பாலை உட்கலந்தாற்போல முத்தொள்ளாயிரம் பாடிய புலவோரும் அல்லது தனித்த புலவரும் மன்னனது வீரத்தையும் புகழையுங் கூறக் காதலைத் துணைக்கொண்டு மரபு பேணினர் என்னும் முடிவுக்கே வரமுடிகின்றது.

முத்தொள்ளாயிரம் பாடியவர் தனித்தவோர் புலவராயின் முப்பேரரசினதும் எழுச்சியினதும் வீழ்ச்சியினதும் பின்னர் அவர் வாழ்ந்த காலம் இருந்திருக்க வேண்டும். மூன்று அல்லது மேற்பட்ட புலவர்களாயின் ஒரு புலவர் பாண்டியனைப் பாடப் பின்வந்தவர்கள் ஏட்டிக்குப் போட்டியாய் சேரனையும் சோழனையும் பாடி இடைவெளிகளை நிரப்பியிருக்கவேண்டும். இவ்வாறான இடைவெளி நிரப்பல், பரந்த தமிழ்நாட்டில் சங்கமொன்றிருந்திருந்தாலொழிய நடைபெற்றிருக்க வாய்ப்பில்லை. சங்கத்தில் முழுமைபெறாது வைக்கப்பட்டிருந்த நூல்கள் காலவோட்டத்தில் பின்வந்த புலவர்களால் முழுமைபெற்றதும் தொகுப்புக்களாக்கப்பட்டதும் நன்கறியப்பட்டதே. முதல் இடை கடைச்சங்கங்கள் இருந்திருக்கின்றன வென்பதற்கு இவ்வகையான நிரப்பல்கள் நடதுள்ளமை மேலுமொரு சான்றாகும். முத்தொள்ளாயிரமும் இதில் துணை நிற்கின்றது.

இனி முத்தொள்ளாயிரப் பாடலென்றை நோக்குவோம்: குழந்தைகளுக்கு உணவூட்டவோ அன்றிக் குளிப்பாட்டவோ உடை உடுத்தவோ நிலவைக் காட்டலும், தெருவிற் செல்லும் பிச்சைக்காரனைக் காட்டிப் பயமுறுத்தலும் பல்வேறு ஆசை வார்த்தைகளைக் கூறலும் நமது வழக்கம். குதலை மொழி பேசித் திரிந்த பாலகியொருத்திக்கு இவ்வாறாகத் தாய் அன்னமூட்டக் கோழிக்கோமான் என்னும் சோழ அரசனைத் துணைக்கழைக்கின்றாள். அரண்மனையில் வாழும் அரசனை உனக்குக் கணவனாக்குவேனடி உங்கு உண்ணடி செல்வமேயென்று கெஞ்சிக் கெஞ்சியே அவளுக்கு உணவோடு சோழனின் பால் காதலுணர்வும் ஊட்டப்பட்டுவிடுகின்றது. குழந்தை பெரியவளாகி மங்கைப் பருவத்தையடைந்தபோதும் சோழன் பால் அவள் குழந்தைப் பருவத்திலிருந்தே வளர்த்தெடுத்த காதலை மறக்க முடியவில்லை. ஆனால் தன்னையறியாமலேயே தன்னுள் சோழன்மீது வளர்ந்;து விட்ட காதலையிட்டுச் சிந்திக்கும் போது தனக்கும் அவனுக்கும் உள்ள இடைவெளி புரிகின்றது. அவன் தன்னை மணந்து கொள்ளுவானென்று வாலிபத்திற் காணும் கனவுகளை அவளது அறிவு புறமொதுக்கி அவன் உனக்கோர் கானல் நீரென உணர்த்துகின்றது. இந் நிகழ்ச்சியைப் பின்வரும் அழகிய செய்யுள் குறிக்கின்றது.

குதலைப் பருவத்தே கோழிக் கோமானை
வதுவை பெறுகென்றாள் அன்னை – அதுபோய்
விளைந்தவா இன்று வியன்கானல் வெண்தேர்
துலங்கு நீர் மாமருட்டியற்று.

இங்கு 'வியன்கானல் வெண்தேர் துலங்கு நீர்' என்பது கடற்கரையில் துலங்கித் தெரியும் கானல் நீரைக் குறிக்கும். அவ்வாறாய் அக்காதல் நோய் என்னை மருட்டி வருத்துகின்றது என்று அப்பாடல் தலைவி கூற்றுரைக்கின்றது

சத்தி முற்றத்துப் புலவர் பாண்டிய மன்னன் பால் தன் வறுமையுரைக்கச் செங்கால் நாரையைத் துணைக்கழைத்ததுபோல் இங்கும் தலைவி காவிரி நாடனான சோழ மன்னன்பால் தன் காமநோயுரைக்கச் செங்கால் நாரையைத் துணைக்கழைக்கின்றாள். வானிற் பறந்து செல்லும் நாரையை நோக்கி நாரையே நீ காற்றைச் சுவாசிக்கக் கரைகளில் வந்து புரளும் மீன்களையள்ள காவிரிக்கரையிலுள்ள உறந்தை நகரைச் சேர்வையாயின் யான் அவன்பாற்கொண்ட காதலைத் தெரிவிப்பாயா உன் செவ்விய கால்களில் என் கைகளை வைத்து வணங்குவேனென்று கூறுவதாக அப்பாடல் அமைகின்றது. அப் பாடல் பின்வருமாறு:

செங்கால் மடநாராய் தென்னுறந்தை சேறியேல்
நின்கால்மேல் வைப்பன் என் கையிரண்டும் - நன்பால்
கரையுறிஞ்சி மீன் பிறழும் காவிரி நீர் நாடற்கு
உரையாயாயோ யானுற்ற நோய்

முத்தொள்ளாயிரத்தில் இவ்வாறாகப் பல பாடல்கள் காணப்படுகின்றன. நாட்டு வளப்பமும் அரசன் புகழும் கூறும் பாங்கில் கம்பன் புகழேந்தி போன்றோருக்கு இணையாகக் கூறப்படவேண்டியவோர் இலக்கிய நயத்தை இந்நூல் தராவிடினும் தமிழரின் பண்டைய பெருமைகளை உணர்த்தும் பாங்கில் தன்பங்கிற்குப் பல தரவுகளை அழகிய செய்யுள்களாய் உரைத்து மகிழ்விப்பதில் முன்னணி வகிக்கின்றது என்ற கூறி இவ்வாய்வை நிறைவு செய்கிறேன்.